பயணத்தடை அமுலிலுள்ள போது, அதனை மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள், குழந்தையை தொட்டிலில் ஈடுபடும் நிகழ்வு நடத்தியவர்கள் மற்றும் ஆலயத்தில் பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டவர்கள் என சுமார் 15 பேருக்கு மேல் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட ஏனையவர்களை இனம் கண்டு அவர்களையும் தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
பருத்தித்துறையில் நடைபெற்ற இந்த சம்பவங்கள் குறித்து மேலும் தெரியவருவதாவது,
“கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இருவர் தமது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர். பயண தடைகளை மீறி அயலவர்கள், உறவினர்கள் என பலர் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர்.
இது குறித்து சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பிறந்தநாள் கொண்டாடிய இருவரின் குடும்பங்கள் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் அடையாளம் காணப்பட்ட சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியில் குழந்தை பிறந்து 31ஆவது நிகழ்வும், குழந்தையை தொட்டிலில் இடும் நிகழ்வும் நடைபெற்றது. அந்நிகழ்வினை நடத்திய குடும்பத்தினர் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை பருத்தித்துறை மாதனை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் பொங்கல் நிகழ்வு நடைபெறுவதாக சுகாதர பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஆலயத்திற்கு அவர்கள் சென்ற போது அவர்களை கண்ணுற்று ஆலயத்தில் கூடி இருந்தவர்கள் தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் அங்கு நின்ற ஆலய தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோரை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.