மன்னாரிலும் சுகாதார ஊழியர்கள், 14 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலை மற்றும் முருங்கன் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளதாவது, “சுகாதார அமைச்சுக்கு நாங்கள் முன் வைத்த கோரிக்கைகளான வைத்தியசாலையிலுள்ள கொவிட்-19 கட்டுப்பாட்டு குழுவில், தொழிற்சங்க பிரதிநிதிகளை இணைத்து கொள்ள வேண்டும்.
மேலும் கர்பிணி சுகாதார துறைசார் ஊழியர்களுக்கு, விசேட விடுமுறைக்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட வேண்டும்.
பயணத் தடை காலத்தில் சுகாதாரதுறை சார் பணிக்குழுவினருக்கு விசேட போக்குவரத்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
அனைத்து பணிக்குழு வெற்றிடங்களையும் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம்.
ஆனால் இவ்விடயத்திற்கு எந்ததொரு தீர்வையும் சுகாதார அமைச்சு முன்வைக்கவில்லை.
மேலும் எங்களது கோரிக்கையினை கவனத்தில் கொள்ளாதமையின் காரணமாகவே ஐந்து தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
குறித்த போராட்டம் தொடர வேண்டுமா? இன்றுடன் முடிவடைய வேண்டுமா? என்பது சுகாதார திணைக்களத்தின் முடிவிலேயே இருக்கின்றது”என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.