நாடளாவிய ரீதியில் நடைமுறையிலுள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக நுவரெலியாவில் பூச்செடிகள் மற்றும் விற்பனைக்காக வளர்க்கப்படும் பூக்களை உற்பத்தி செய்வோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உற்பத்தி செய்யப்பட்ட பூக்களை விற்பனை செய்ய முடியாதமையினால் தங்களது நாளாந்த வருமானத்தை இழந்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள குறித்த பயணக் கட்டுப்பாடு காரணமாக பொது வைபவங்கள் மற்றும் வீட்டு வைபவங்கள், ஆலய வைபவங்கள் என அனைத்து நிகழ்வுகளும் தடைப்பட்டுள்ளன.
இதனால் உற்பத்தி செய்துள்ள மலர்களை விற்பனை செய்துக்கொள்ள முடியவில்லை. மேலும் செடியிலிருந்து உரிய காலப்பகுதியில் பூக்களை அகற்ற முடியாதமையினால், மழையால் பழுதாகியும் உதிர்ந்தும் கொட்டும் நிலை உருவாகியுள்ளது.
மலர் செய்கை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் தமது ஜீவனோபாய வாழ்க்கை வருமானத்தை இழந்துள்ளனர்.
ஆகவே பூக்கள் வளர்ப்பாளர்களின் வாழ்வாதார பாதிப்புக்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், விவசாயம் மற்றும் சுயத்தொழில் துறை அமைச்சு இவ்விடயத்தில் உரிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்” என பூக்கள் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.