திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் இன்று(திங்கட்கிழமை) ஆறாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தம்மை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல், கருணைக் கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இதுகுறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “இலங்கை வாழ் தமிழ் மக்கள் அயல் நாடாம் இந்திய தாய் திரு நாட்டில் அடைக்கலம் புகுந்த வேலையில் இது வரை காலமும் ஆற்றி வந்த அளப்பரிய நன்மைகளை நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்.
மேலும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு முகாம்களில் வாழும் இலங்கை வாழ் தமிழ் மக்களின் சிரமங்களையும் கஸ்டங்களையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வந்து அதற்கான தீர்க்கமான சாத்திகமான முடிவுகளை எடுக்குமாறு தங்களை வேண்டி நிற்கின்றேன்.
அத்தோடு இந்த குடும்பங்களின் ஒரு சில குடும்ப தலைவர்கள் திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களது குடும்ப அங்கத்தவர்களுடன் இணைந்து தங்கள் வாழ்க்கையினை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளனர்.
முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் இவர்களுடைய மன ஆதங்கத்தை கருத்தில் கொண்டு இவர்களுடைய விடுதலைக்காகவும் மேலான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் எனவும் நான் நம்புகிறேன்.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.