சில நாடுகள் மட்டுமே உள்ள சிறு குழுக்கள் உலகின் விதியை நிர்ணயிக்கும் காலம் எப்போதோ முடிந்துவிட்டது என சீனா, ஜி-7 நாடுகளிடம் தெரிவித்துள்ளது.
குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் சீனாவின் திட்டத்தை போன்று ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளதன் பின்னணியில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரித்தானியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஸெங் ஸெகுவாங் கூறுகையில், ‘ஒருசில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் முடிவு எடுக்கும் காலம் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துவிட்டது. சிறு குழுக்கள் இனியும் உலகை ஆள முடியாது.
சீனாவைப் பொறுத்தவரை அளவில் பெரிய நாடோ அல்லது சிறிய நாடோ, பலவீனமானதோ அல்லது பலமான நாடோ, ஏழையோ அல்லது பணக்கார நாடோ அனைத்தும் சமமே.
சர்வதேச விவகாரங்களில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஐ.நா., கொள்கையை ஒட்டிய சர்வதேச முடிவுகள் எட்டப்பட வேண்டும். ஜி-7 போன்ற குழுக்கள் உலகை ஆள முடியாது’ என கூறியுள்ளார்.