தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் குறித்த கூர்மையான வேறுபாடுகளைச் சமாளிக்கும் முயற்சிகளில் ஈரானும் அமெரிக்காவும் வெள்ளிக்கிழமை (6) ஓமானில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின,
ஆனால் நிகழ்ச்சி நிரலை விரிவுபடுத்துவது குறித்த சர்ச்சை இராஜதந்திரத்தைத் தடம் புரட்டி மற்றொரு மத்திய கிழக்கு மோதலைத் தூண்டும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கத்திய நாடுகளுடனான தெஹ்ரானின் நீண்டகால அணுசக்தி முரண்பாடு தொடர்பாக இராஜதந்திரத்தை புதுப்பிக்க இரு தரப்பினரும் தயாராக இருப்பதாக அடையாளம் காட்டியுள்ள நிலையில், ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகள், பிராந்தியத்தைச் சுற்றியுள்ள ஆயுதக் குழுக்களுக்கான ஆதரவு மற்றும் “தங்கள் சொந்த மக்களை நடத்துவது” ஆகியவற்றை உள்ளடக்கியதாக பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்த வொஷிங்டன் விரும்புகிறது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ புதன்கிழமை (05) தெரிவித்தார்.
மஸ்கட்டில் அணுசக்தி பிரச்சினை குறித்து மட்டுமே வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்கியும் அமெரிக்க மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப்பும் விவாதிக்க வேண்டும் என்று ஈரான் விரும்புவதாகக் கூறியுள்ளது.
காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளார்.
இதனிடையே, ஈரானுக்கு அருகில் அமெரிக்க கடற்படையின் இராணுவக் குவிப்புக்குப் பிறகும், ஈரானை தாக்குவதற்கான தனது அச்சுறுத்தல்களை ட்ரம்ப் இன்னும் செயல்படுத்தக்கூடும் என்று தெஹ்ரானின் மதகுருமார் தலைமை ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.













