சுதந்திர தினத்துக்கு முன்பே புதுச்சேரியிலுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த 3 மாதங்களில் புதுச்சேரியில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
காரைக்கால் மாவட்டத்திலுள்ள 4 கிராமங்களிலும் புதுச்சேரியிலுள்ள 6 கிராமங்களிலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த சாதனையை ஏனைய பகுதிகளிலும் விரிவுப்படுத்த வேண்டும். சுதந்திர தினத்திற்கு முன்னர், புதுச்சேரியிலுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க வேண்டும்.
இந்த தடுப்பூசி மாத்திரமே கொரோனாவுக்கு எதிரான ஆயுதம் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.