கொரோனா வைரஸுக்கு எதிராக அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற இலங்கையர்களுக்கு ஃபைசர் – பயோஎன்டெக்கை இரண்டாவது டோஸாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழுவின் ஆலோசனையை அரசாங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பாக தொற்று நோய்களுக்கான ஆலோசனைக் குழுவின் நிலைப்பாடு குறித்து தங்களுக்கு தெரிவிக்குமாறு இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசெல குணவர்தனவிடம் கேட்டுக்கொண்டார்.
இலங்கைக்கு சுமார் 60 இலட்சம் டோஸ் அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.
இந்த நிலையில், அஸ்ட்ரா செனக்கா தடுப்பூசியின் பற்றாக்குறை காரணமாக இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அஸ்ட்ரா செனக்கா மற்றும் ஃபைசர் – பயோஎன்டெக் தடுப்பூசிகளின் கலவையானது குறிப்பிடத்தக்க வலுவான நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது என ஜேர்மனியின் ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.