உத்தரப்பிரதேசம்- ஆக்ரா, தாராயாய் கிராமத்தில் 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது குழந்தை, 8 மணி நேர போராட்டத்தின் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
நேற்று (திங்கட்கிழமை) காலை, விளையாடிக்கொண்டிருந்த குறித்த குழந்தை தவறுதலாக ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ளது.
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பதேஹாபாத்திலுள்ள நிபோஹாரா பொலிஸ் நிலையத்துக்கு சம்பவம் தொடர்பாக தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் மீட்பு குழுவினர், குழந்தையை மீட்கும் பணியினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது முதற்கட்டமாக குழந்தைக்கு தேவையான ஒட்சிசன் மற்றும் குளுகோஸ் ஆகியவற்றை வழங்கினர்.
அதற்பின்னர் 8 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் குழந்தையை நேற்று மாலையே உயிருடன் மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட குழந்தை மிகவும் சோர்வாக இருந்தமையினால், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் மீட்பு குழுவினர் அனுமதித்தனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள், மீட்பு குழுவினரின் குறித்த சேவைக்கு பாராட்டு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.