கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அனைத்து சுற்றுலா தலங்களையும் மூடுமாறு மத்திய தொல்லியல்துறை அறிவிப்பு விடுத்திருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி தொல்லியல்துறை, சுற்றுலா தலங்களை மூட முதலில் உத்தரவு பிறப்பித்தது.
முதலில் மே 15ஆம் திகதி வரை என அறிவிக்கப்பட்டு பின்னர் ஜூன் 15ஆம் திகதி வரை குறித்த முடக்கத்தை தொல்லியல்துறை நீடித்தது.
இந்நிலையில் தற்போது, கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளமையினால், ஹோட்டல்கள், கடைகள் ஆகியவை திறப்புக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இதேபோன்று மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வழிபாட்டு தலங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றையும் திறப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தாஜ்மஹால் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் நாளை திறக்கப்படவுள்ளன.
இவ்வாறு சுற்றுலா தலங்களை திறக்கும் நடவடிக்கை மாநில மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணைய நிர்வாக உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டது என்றும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.