கொரோனா வைரஸ் மற்றும் எதிர்கால தொற்றுநோய்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த உலகளாவிய பதிலுக்காக ஆடுகளமொன்றினை உருவாக்கியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஜி 7 உச்சி மாநாட்டின் ஒரு அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான காப்புரிமை பாதுகாப்பை தள்ளுபடி செய்வதற்கான இந்தியாவின் முன்மொழிவுக்கு ஆதரவாக, “ஒரு பூமி, ஒரே ஆரோக்கியம்” என்ற மந்திரத்துடன் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் எதிர்கால சுகாதார அவசரநிலைகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், எதிர்கால தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான ஜனநாயக மற்றும் வெளிப்படையான சமூகங்களின் சிறப்புப் பொறுப்பையும் பிரதமர் மோடி இதன்போது சுட்டிக்காட்டினார்.
இதேவேளை அரசாங்கம், தொழில் மற்றும் சிவில் சமூகத்தின் முயற்சிகளை ஒருங்கிணைக்கும் தொற்றுநோயை எதிர்ப்பதற்கான இந்தியாவின் அணுகுமுறையை பிரதமர் மோடி எடுத்துரைத்ததுடன் இந்தியா, தனது நிபுணத்துவத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளில் இந்தியாவின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அதே வேளையில், கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமை பாதுகாப்பைத் தள்ளுபடி செய்வதற்கான உலக வர்த்தக அமைப்பில் (WTO) இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் முன்மொழிவுக்கு ஜி 7 மாநிலங்களின் ஆதரவையும் பிரதமர் மோடி கோரினார்.
குறித்த அமர்வின் சிறப்பு அழைப்பாளரான அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மற்றும் பலர் காப்புரிமையை தள்ளுபடி செய்வதற்கான முன்மொழிவை ஆதரித்தனர்.