இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார, சர்வதேச கிரிக்கெட் சபையின் ‘ஹால் ஒஃப் ஃபேம்’ பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சுனில் கவாஸ்கர் அதிகாரப் பூர்வமாக ‘ஹால் ஒஃப் ஃபேம்’ பட்டியலில் இணைத்துக் கொண்டார்.
இதன்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், அவருக்கு சிறப்பு தொப்பி சின்னம் பொறித்த விருதினை வழங்கி ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் வரவேற்றார்.
இதன்படி, ஐ.சி.சி ஹால் ஒஃப் ஃபேமில் நுழைந்த 10 மகத்தான வீரர்களில் குமார் சங்கக்காரவும் ஒருவர்.
முன்னதாக, கவாஸ்கர், ராகுல் டிராவிட்டை ஐ.சி.சி ஹால் ஒஃப் ஃபேமில் கடந்த 2018ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டார்.
கவாஸ்கர் மற்றும் சங்கக்காரா இருவரும் தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வர்ணனையாளராக செயற்பட்டுவருகின்றனர்.
43 வயதான குமார் சங்கக்காரர், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், 134 டெஸட், 404 ஒருநாள் மற்றும் 56 ரி-20 போட்டிகளில், 63 சதங்கள் மற்றும் 145 அரைசதங்கள் அடங்களாக 27ஆயிரத்திற்கும் அதிகமான ஓட்டங்களை குவித்துள்ளார்.