சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களை மீறுவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகவே சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டார்.
சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஜூலை 5 வரை அமுலில் இருக்கும் என்றும் இதனை மேற்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இன்று முதல் மேல் மாகாணம் முழுவதும் 37 நிரந்தர வீதித் தடைகள் உட்பட 700 வீதித் தடைகள் அமைக்கப்படும் என அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் உடையிலும் சிவில் உடையிலும் சுமார் 10,000 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் மோட்டார் சைக்கிள் ரோந்துப் பணிகளும் இடம்பெறும் என அஜித் ரோஹண தெரிவித்தார்.