சீனாவில் இதுவரை பொதுமக்களுக்கு 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
எனினும், உலகின் பிற நாடுகளைப் போல் அங்கும் இரண்டு தவணைகளாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் நிலையில், எத்தனை பேருக்கு இதுவரை முழுமையாக அந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்ற விபரத்தை ஆணையம் வெளியிடவில்லை.
கடந்த மாதம் வரை சீனாவில் செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 50 கோடியாக இருந்தது. அந்த எண்ணிக்கை குறுகிய காலத்தில் தற்போது இரட்டிப்பாகியுள்ளது.
சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாகும் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகளை வழங்குவதை சீனா இலக்காக வைத்துள்ளது.
சீனா தனது மக்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சினோஃபாம் மற்றும் சினோவேக் தடுப்பூசிகளை செலுத்துகிறது. இரண்டுமே இரண்டு டோஸ்கள் செலுத்தி கொள்ள வேண்டும்.
இந்த வருடத்தின் முடிவில் மக்கள் தொகையில் 70 சதவீத பேருக்கு தடுப்பு மருந்து செலுத்த இலக்கு வைத்துள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் உள்ள அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சினோஃபார்ம் தடுப்பு மருந்து 79 சதவீத பலன் தருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
சினோவேக் தடுப்பு மருந்து எடுத்து கொண்டவர்களில் 51 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்படமால் உள்ளது. மேலும் 100 சதவீத மாதிரிகளில் தீவிர அறிகுறிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையை தடுத்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.