பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஓய்வூதியம் வழங்கி அவர்களை ஊக்குவிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அந்நாட்டையே பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இந்தியா முறைப்பாடு அளித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை ஆணையரின் வருடாந்திர அறிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த இந்திய பிரதிநிதி பவன் குமார் பாதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம் அன்றாட நிகழ்வாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மையின சிறுமிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர்.
பத்திரிகையாளர்கள் கடத்தப்படும், கொல்லப்படும் சம்பங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. ஐ.நாவால் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துவருகிறது. அவர்களுக்கு தொடர்ந்து ஓய்வூதியம் வழங்குகிறது.
பயங்கரவாதத்தை ஊக்கவிப்பதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அந்நாட்டை பெறுப்பேற்கச் செய்ய வேண்டும். பயங்கரவாதத்தால் ஏற்படும் துன்பம், மனித உரிமை மீறலாகும். இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.