தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பில் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட சம்பவம் முற்றுமுழுதாக ஒரு கொலை.
இது தொடர்பில் உரியவாறு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றோம்.
ஏனென்றால் மெயப்பாதுகாவலராக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை நியமிப்பது தான் வழக்கம். MSD என்று சொல்லப்படுகின்ற Ministry Security Division என்பது உண்மையிலே அனுபவம் வாய்ந்த சிறந்த அதிகாரிகளை நியமிப்பது தான் அரசாங்கத்தின் கடமை.
ஆகவே அதனை மீறி அனுபவமற்ற ஒரு இளைஞன் அதுவும் ஒரு தமிழ் இளைஞன் இவ்வாறு தனது துப்பாக்கியால் கொலை செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் முன்னுக்கு பின் முரணான செய்திகளை வெளியிட்டு அந்த பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கு முயன்று வருகிறார்.
ஏனென்றால் மூன்று மாதமாக தனது வீட்டு சிசிடிவி கமெரா வேலை செய்யவில்லை என்பதும், பக்கத்து வீட்டு கமெரா கூட வேலை செய்யவில்லை என்பதும், கண்மூடித்தனமான சிறுபிள்ளை தனமான செயற்பாடு.
இதனை துப்பறியும் ஆய்வகத்திற்கு அனுப்புகின்ற போது அவர்களால் எதனையும் மறைக்க முடியாது. இந்த கொலையை மறைக்க முற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது இதனை அவர் பொறுப்பேற்க வேண்டும்.
தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எடுத்தவுடனேயே அவர் துப்பாக்கியால் சுட்டிருப்பது ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவே காணப்படுகிறது.
வருகின்ற தகவல்களின் படி அந்த சம்பவம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் உயிரிழந்த நபர் அவர்களுடன் முரண்பட்டுள்ளார். என்னை பொறுத்தவரை வியாழேந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விடயம். இது தொடர்பில் வியாழேந்திரன் முன்னுக்கு முரணான தகவல்களை வெளிப்படுத்துவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.
இதனை சட்ட ரீதியாக பார்க்கின்ற போது அமைச்சர் கூறுகிறார் நான் அங்கு இருக்கவில்லை என்று. ஆனால் அவர் 12 மணி வரை வீட்டில் இருந்ததற்கான ஆதாரம் இருக்கின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.