மன்னார்- தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் கிழக்கு கிராம அலுவலகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது, “தலைமன்னார் பியர் பகுதியில் இதுவரை 62 பேர், வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆகவே தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.மாதிரிகள் கொழும்பு ஜெயவர்த்தன புர பல்கலைக்கழகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு தொற்று ஏற்பட்ட வைரஸ் புதிதாக திரிவடைந்த வைரஸின் ஏதாவது ஒன்றா? என்கின்ற முடிவுகள் ஒரு வாரத்தில் கிடைக்கப்பெறும் என எதிர் பார்க்கின்றோம்.
அதாவது, நூறு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொண்டால் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்படுகின்றது. இது அபாயகரமான நிலமையாகும்.
எனவே மக்கள் இதனை உணர்ந்து, சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிப்பதுடன் அநாவசியமாக வெளியில் நடமாடுவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இதேவேளை மன்னாரில் இதுவரை 5பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.