நாட்டு மக்களுக்கான விசேட உரையை ஜனாதிபதி கோட்டபா ராஜபக்ஷ இன்று இரவு நிகழ்த்தினார்.
இதன்போது, உலக அளவில் எதிர்நோக்கியுள்ள கொரோனா தொற்றுநோய் பரவல், நாட்டின் அபிவிருத்தி, இறுதி யுத்தம், அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக நீண்ட உரையினை ஜனாதிபதி நிகழ்த்தியுள்ளார்.
அதில் முக்கியமாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் மட்டுமன்றி அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட்-19 தொற்றுப் பரவல் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், நாட்டின் அந்நியச் செலாவணி வீழ்ச்சி உட்பட அபிவிருத்தி பின்னடைவுகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், ஒருபோதும் முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்று கருதப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டுவரும் பொறுப்பை அன்று தாம் பொறுப்பெடுத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதேபோன்று, நாடு தற்போது முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளில் இருந்தும் மீண்டுவந்து மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் தான் அர்ப்பணிப்புடன் உள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
மேலும், தான் எப்போதும் ஒரு திட்டத்தின் அடிப்படையிலேயே செயற்படுவதாகவும் எதிர்காலத்துக்கான திட்டத்தை வகுக்கும் போது, கடந்த காலத்தை மறந்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த காலத்தின் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்வதற்கு, தமக்கு மீண்டும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், சரியான திட்டத்துடன் உறுதியாகச் செயற்படும்போது மட்டுமே, சுபீட்சத்தை அடைந்துகொள்ள முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையின் வரலாற்றை எழுதும்போது, நாம் கடந்து செல்லும் இந்தக் காலப்பகுதி, எவ்வளவு கஷ்டமானது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும் போதும், அந்தக் கஷ்டங்களுக்கு மத்தியிலும், நாம் வெற்றியுடன் முன்னோக்கிச் செல்கின்றோமா என்பதைத் தீர்மானிக்கின்ற பொறுப்பு எமது கைகளிலேயே உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது உரையில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உரையின் முழு விபரத்தை அறிய கீழ்வரும் Link ஐ Click செய்யவும்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை 2021.06.25