தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் நாடாளுமன்றத்திற்குள் நுழைவார் என அரசியல் வட்டார தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பொருளாதார நிபுணரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் பண்டார நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய பின்னர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார்.
ரஞ்சித் பண்டார பதவி விலகியதை அடுத்து அவர் இலங்கை மத்திய வங்கியில் உயர் பதவியில் (ஆளுநராக) நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே ரஞ்சித் பண்டார பதவி விலகிய பின்னர் ஜூலை 6 ம் திகதி பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நேற்று தனது பதவி விலகல் குறித்து கருத்து வெளியிட்டிருந்த ரஞ்சித் பண்டார, அவ்வாறானதொரு எந்த முன்மொழிவோ அல்லது பேச்சுவார்த்தையோ நடைபெறவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் நேற்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்திருந்த அர்ஜுன ரணதுங்க, பசில் ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு வருவது என்பது பெரிய விடயம் இல்லை என்றும் அவர் வருவதால் ஏதும் பிரச்சினையா என்றும் கேள்வியெழுப்பியிருந்தார்.