தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் குறித்த விசேட கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இதன்போது மட்டக்களப்பில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிவகைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய், மாமாங்கம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால் அப்பகுதிகளில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இதேவேளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுத்தல் மற்றும் அறிவுறுத்தல்களை பின்பற்றாத வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.கிரிசுதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, இராணுவம், பொலிஸ் அதிகாரிகள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.