சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் 60 பேரின் பெயர் பட்டியல் மற்றும் விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் அனுப்பி வைத்துள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசாங்கத்தினால், அண்மையில் 16 தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இதனை நாம் வரவேற்பதுடன், ஏனைய அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தொடக்கப் புள்ளியாகவும் இது அமையும் என முருகையா கோமகன் கூறியுள்ளார்.
அதாவது ஏனைய அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்கள் அனைவரது எதிர்ப்பார்ப்பாகும். ஆகவேதான் 11 வருடங்கள் தொடங்கி 26 வருடங்களாக சிறையில் இருக்கும் 60 தமிழ் அரசியல் கைதிகளின் பெயர், தண்டணை விபரங்கள், வழக்கு விபரங்கள் போன்ற சகல விபரங்களும் உள்ளடக்கிய கோவையை 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாங்கள் அனுப்பி வைத்துள்ளோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அண்மைக்காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உடைய விபரங்களை நாங்கள் தற்போது தயாரித்து கொண்டிருக்கின்றோம். அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.