தாதியர் சங்கத்தினர் முன்வைத்துள்ள ஏழு கோரிக்கைகளில் ஐந்திற்கு உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மீதமுள்ள இரண்டு கோரிக்கைகளுக்கும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் ஊடக தீர்வுகளை வழங்கவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
தாதியர் சங்கத்தினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுதல், நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் கைவிடப்பட்ட ஊழியர்களின் நிலையை மீட்டெடுப்பது, கைவிடப்பட்ட மூன்றாம் வகுப்பில் இருந்து இரண்டாம் வகுப்பிட்கு ஐந்து ஆண்டுகளுக்கும், இரண்டு முதல் முதலாம் வகுப்பினருக்கு ஏழு ஆண்டுகளுக்கும் பதவி உயர்வு வழங்கல், உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தீர்வுகளை பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், ஆண்டு ஒன்றுக்கான சீருடை கொடுப்பனவு 20 ஆயிரம் ரூபாய் வழங்குதல், தற்போதைய 36 மணிநேர வேலை நேரத்தை வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு 30 மணி நேரமாக மாற்றுவது தொடர்பில் சிறப்புக் குழு ஒன்றினை நியமித்தல் ஆகிய கோரிக்கைகளுக்கும், உடனடியாக தீர்வுகளை வழங்குமாறு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
அத்துடன், 2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சினால் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், அடிப்படை சம்பளத்தில் நூற்றுக்கு 1 என்ற விகிதத்தில் கூடுதல் சேவை கொடுப்பனவும் வழங்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறையில் அரசாங்கத்திற்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதாகவும், தாதியர் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு உரிய அந்தஸ்தை வழங்குமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தியிருந்தார்.