பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள சம்பள விவகாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் தலையிடுமாறு வலியுறுத்தி சர்வதேச தொழில் அமைப்பிற்கு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஹற்றனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வே.இராதாகிருஷ்ணன் மேலும் கூறியுள்ளதாவது, “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுத்துள்ளதாக மார்தட்டியக்குழு தற்போது காணாமல்போயுள்ளது.
மேலும் 1000 ரூபாய் சம்பள விவகாரத்துக்கு பின்னர் தொழிலாளர்கள் நிர்வாகத்தினரால் நசுக்கப்படுகின்றனர். தொழில் சுமைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இதனால் தற்போது பெரும்பாலான பகுதிகளில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
ஆகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனைகளும் இன்றி, இதற்கு முன்னர் செய்த வேலையின் அளவுக்கே நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கிடைப்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் தொழில்சார் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு அவசியம் உள்ளிட்ட சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொழில் ஆணையாளருக்கு நாம் கடிதமொன்றினை எழுதினோம்.
இதேவேளை தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க ஒத்துழைப்பு வழங்குமாறு கம்பனிகளிடமும் கோரினோம். ஆனால் இரு தரப்பினருமே எமது கோரிக்கைகளை செவிமடுக்கவில்லை.
அரசாங்கமும் தொழிலாளர்களின் குறித்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஆகவேதான் இவ்விடயத்தில் தலையீடுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி சர்வதேச தொழில் அமைப்புக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.