தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 1600 நாளை, இன்று (திங்கட்கிழமை) எட்டியுள்ளது.
இந்நிலையில் அதனை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட உறவுகள், “தமிழர் பகுதியில் இருந்து சீனா உடனடியாகவெளியேற வேண்டும்.
தமிழர்கள் கடந்த 74 வருடங்களாக அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்வதற்காக போராடி வருகின்றனர்.
மேலும் கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற போரின்போது, 146,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 25,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் .
இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் எமது உறவுகளை தேடி முன்னெடுத்து வருகின்ற எங்களது போராட்டம் 1600ஆவது நாளினை எட்டியுள்ளது.
ஆனால், இன்னும் அதற்கான நீதியை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இதேவேளை ஐ.நா.பாதுகாப்புக் குழுவில், தமிழர்களுக்கான நீதியை சீனா எதிர்ப்பதால், அவர்கள் தமிழர்களின் நண்பர் அல்ல.
எனவே, எமது பகுதிகளில் இருந்து சீனா உடனடியாக வெளியேற வேண்டும். மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டை தாமதிக்காமல் முன்னெடுக்க வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.