ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமையானது, அரசமைப்புக்கும் இறையாண்மைக்கும் முற்றிலும் புறம்பானது என மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சுட்டிக்காட்யுள்ளது.
இந்த விடயம் குறித்து மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலின்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட ரீதியான வேட்பாளர் பட்டியல் மற்றும் தேசியபட்டியல் ஆகியவற்றில் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்காத பசில் ராஜபக்ஷ, தற்போது வெற்றிடமாகியிருக்கும் தேசியபட்டியல் ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டிருப்பதானது அரசியலமைப்புக்கும் இறையாண்மையையும் முற்றிலும் முரணான செயற்பாடாகும் என விமர்சிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தமையினால் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதியை இழந்திருந்தார் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும் என்று அந்த நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கடந்த பொதுத் தேர்தலின்போது, இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்தமையினால் நாடாளுமன்ற உறுப்பினராகும் தகுதியை பசில் ராஜபக்ஷ இழக்கவேண்டியேற்பட்டது.
இந்த நிலையில், வெற்றிடமாகியிருக்கும் தேசியபட்டியல் ஆசனத்திற்கு தற்போது பசில் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையானது இலங்கை மக்களின் இறையாண்மையைப் புறக்கணிப்பதாகவும் அந்த நிலையம் குற்றஞ்சாட்டியுள்ளது.