விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வந்த, ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற, விம்பிள்டன் பகிரங்க டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
உலகில் மிகவும் பழமையான இந்த தொடர், புற்தரையில் நடைபெறும் சிறப்பு மிக்க தொடராகும்.
ஆண்கள்- பெண்கள் என இரு பிரிவினருக்கும் நடைபெறும் இத்தொடரில், மொத்தம் நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதன்படி தற்போது பெண்களுக்கான அரையிறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்,
1.பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் அரையிறுதிப் போட்டியில், செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, பெலராஸின் ஆர்யனா சபாலெங்காவுடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை, சபாலெங்கா கடுமையாக போராடி 7-5 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய கரோலினா பிளிஸ்கோவா, இரண்டாவது செட்டை 6-4 என கைப்பற்றி பழிதீர்த்தார்.
இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட் பரபரப்படைந்தது.
இதில் அதே ஆக்ரோஷத்தை தொடர்ந்த கரோலினா பிளிஸ்கோவா, மூன்றாவது செட்டையும் 6-4 என கைப்பற்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.
2.பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், உலகின் முதல்நிலை வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டி, ஜேர்னியின் ஏஞ்சலிக் கெர்பரை எதிர்கொண்டார்.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியின் முதல் செட்டை ஆஷ்லே பார்டி, 6-3 என கைப்பற்றி முன்னிலைப் பெற்றார்.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட் பறிபோனால் வெற்றி கைநழுவி போகுமென அறிந்த கெர்பர், ஆஷ்லே பார்டிக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
இதனால் இரண்டாவது செட் டை பிரேக் வரை நீண்டது. எனினும் இந்த செட்டில் அசராத ஆஷ்லே பார்டி, இறுதியில் செட்டை 7-6 என கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
இதன்படி நாளை நடைபெறும் சம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில், செக்.குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவும் உலகின் முதல்நிலை வீராங்கனையான அவுஸ்ரேலியாவின் ஆஷ்லே பார்டியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.