மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள், போராட்டமொன்றினை இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்துள்ளனர்.
மஸ்கெலியா பிரதேச சபைக்கு முன்பாக, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதாவது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், எரிபொருட்களின் விலை ஆகியவற்றினை உடனடியாக குறைக்குமாறும் தொழிற்சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும் மலையகத்தில் தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியுமே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1000 ரூபாய் வழங்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் வேலை நாட்கள் குறைக்கப்பட்டு, தொழில் சுமை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோன்று ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.