தமது சொந்த நலனுக்காக ஒருசில அதிகாரிகள் எடுக்கும் தவறான முடிவுகளால் மக்கள் வீதியில் இறங்கிபோராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியா புதியசின்னப்புதுக்குளம் பகுதியில் செயற்பட்டுவரும் கற்குவாரியால் அந்தப்பகுதி மக்கள் பல்வேறு ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பாக நேற்று(புதன்கிழமை) குறித்த கிராமத்திற்கு விஜயம் செய்த சாள்ஸ் நிர்மலநாதன் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “குறித்த பகுதியில் உள்ள கற்குவாரியால் கிராம மக்கள் பல்வேறு உளவியல் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த பகுதி மக்கள் விவசாயத்தையே நம்பிவாழ்கின்றனர். எனவே இந்த மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் விதத்தில் இந்த கற்குவாரி செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. மக்கள் நலன்சார்ந்து துறைசார்ந்த அதிகாரிகள் செயற்படாமையே இதற்கு முக்கியகாரணம்.
தங்களுடைய சொந்த நலனுக்காக ஒருசில அதிகாரிகள் எடுக்கும் தவறான முடிவுகளால் மக்கள் வீதியில் இறங்கிபோராட வேண்டிய சூழல் இருக்கிறது. அப்படியான ஜனநாயக போராட்டங்களை கூட கொரோனா தடுப்புசட்டங்களை காட்டி அரசாங்கம் ஒடுக்கிவருகின்றது.
குறித்த காணிக்கான உரிமையாளர் உரிமைபத்திரத்தையும் வைத்திருக்கும் நிலையிலும் குறித்த காணி கற்குவாரிக்காக வழங்கப்பட்டுள்ளது.
இது மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மிகவும் பாதிக்கின்றது. இதனை நிறுத்துவதற்கு அரசும் துறைசார் அதிகாரிகளும் முழுமையாக செயற்படவேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.