ஊடகங்கள் நடுநிலையான கருத்துகளை தெரிவிக்கவேண்டும், அதுவே அனைவருக்கும் ஆரோக்கியமானதாகும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதியோ, பிரதமரோ, அரசாங்கத்தில் உள்ள பொறுப்புவாய்ந்த அமைச்சர்களோ ஊடகங்களை அடக்கவேண்டும் என கூறவில்லை. எதிர்க்கட்சியினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம்.
ஜனாதிபதி எந்த இடத்திலும் ஊடகங்களை அடக்கவேண்டும், ஒடுக்கவேண்டும் என கூறியதாக நான் அறியவில்லை. ஊடக சுதந்திரம் பேணப்படவேண்டும் என்பதில் ஜனாதிபதி மிகவும் கவனமாக இருக்கின்றார்.
ஜனநாயக ரீதியான போராட்டங்களை அரசாங்கம் ஒடுக்குவதாக எதிர்க்கட்சியினர் தான் குற்றங்களை சுமத்துகின்றார்கள். நாட்டிலே தற்போது கொரோனா சூழல் இருக்கின்றது.
இந்த கொரோனா சூழலுக்கு ஏற்ற வகையிலே நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தான் அரசாங்கம் பணிப்புரைகளை விடுத்து வருகின்றது. “ எனக் குறிப்பிட்டுள்ளார்.