நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தோற்கடித்தாலும், மக்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நிதியமைச்சுப் பதவி பறிக்கப்பட்டமைக்கு எரிபொருள் விலையேற்றமா காரணம் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கொரோனாவினால் மக்களின் வாழ்வாதாரம் பெரும் சவாலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், எரிப்பொருட்களின் விலையை உயர்த்தி, எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பில மேலும் மக்களை சிக்கலுக்கு உட்படுத்தியுள்ளார்.
இதற்கு ஆளும் தரப்பு உறுப்பினர்களே எதிர்ப்பினை வெளியிட்டுள்ள நிலையில், எரிபொருள் விலையேற்றத்திற்கு தான் காரணமில்லை என்றும், நிதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாகவே எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதாகவும் அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்திருந்தார்.
அப்படியென்றால் ஆளும் தரப்பு உறுப்பினரான சாகர காரியவசம் உள்ளிட்டவர்கள் நிதியமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ மீதா குற்றம் சுமத்துகிறார்கள் இதற்காகத்தானா அவரது நிதியமைச்சுப் பதவியும் பறிக்கப்பட்டது? இவ்வாறான நாடகங்களை அறங்கேற்றி மக்களை முட்டாளாக்க முற்படக்கூடாது.
இந்த அரசாங்கம் எரிபொருள் பெரலின் விலை சர்வதேச ரீதியாக குறைந்தபோதும்கூட, எரிபொருளின் விலையைக் குறைக்கவில்லை. அரசாங்கம் திரைமறைவில் ஒரு நாடகாத்தையே அரங்கேற்றி வருவதாலேயே நாம் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவந்துள்ளோம்.
இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கத்தரப்பினர் தோல்வியடைச் செய்தாலும், மக்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த அரசாங்கம்தான் இலங்கை வரலாற்றிலேயே மிகவும் மோசமான அரசாங்கமாக காணப்படுகிறது.
முடிந்தால் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பசில் ராஜபக்ஷ, எரிபொருள் விலையேற்றம் தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றுமாறு நான் சவால் விடுக்கிறேன். தேர்தலொன்று இடம்பெற்றால் இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க மக்கள் தயாராக உள்ளார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.