மலையகத்தில் புதிய தொழிற்சங்க கூட்டணிக்கு 12 சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் விஜயசந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் விஜயசந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்ப்பதற்கு தேசிய பெருந்தோட்ட தொழிற்சங்க சம்மேளனம் எனும் கூட்டணியை உருவாக்குவதற்கு மலையகத்தில் இயங்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
குறிப்பாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி உட்பட மலையகத்தில் செயற்படும் 12 தொழிற்சங்கங்கள், புதிய தொழிற்சங்க கூட்டணியை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கியுள்ளன.
அதாவது தொழிலாளர் நலன்சார் விடயங்களில் கட்சி, தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைவதற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.
இதனால் சட்டம், அரசியல் ரீதியில் வெவ்வாறாக அன்றி ஒன்றாக அழுத்தம் கொடுக்கக்கூடிய சூழல் இதனூடாக உருவாகும்.
இதேவேளை கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் வேளையில், கம்பனிகளின் சார்பில் முதலாளிமார் சம்மேளனம் கைச்சாத்திடுவதுபோல தொழிலாளர்களின் சார்பில் தொழிற்சங்க சம்மேளனத்தை கைச்சாத்திட வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.