பொங்கி எழும் காட்டுத்தீயில் இருந்து வரும் கடுமையான புகை, ரஷ்ய நகரமான யாகுட்ஸ்க், 50 பிற சைபீரிய நகரங்கள் மற்றும் குடியிருப்புகளை மூடியுள்ளது.
வடகிழக்கு சைபீரியாவில் உள்ள சாகா-யாகுடியா பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பரவலாக ஏற்பட்ட இந்த காட்டுத் தீ, வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை மற்றும் தீ பாதுகாப்பு விதிகளை புறக்கணித்தல் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் அவசர அதிகாரிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இப்பகுதியில் 187 தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், கடந்த 24 மணித்தியாலத்தில் மொத்தம் 100,000 ஹெக்டேர் (சுமார் 247,000 ஏக்கர்) ஏரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து யாகுடியாவின் ஆளுநர் ஐசென் நிகோலாயேவ் கூறுகையில், ‘எங்கள் குடியரசில் காட்டுத்தீ ஏற்படும் நிலைமை மிகவும் கடினம். யாகுட்டியாவில் கடந்த 150 ஆண்டுகளில் வறண்ட கோடைகாலத்தை நாங்கள் அனுபவித்து வருகிறோம். ஜூன் மாதம் பதிவில் வெப்பமானதாக இருந்தது. இது, எங்கள் குடியரசில் கிட்டத்தட்ட தினசரி ஏற்படும் வறண்ட இடியுடன் சேர்ந்து, குறிப்பிடத்தக்க காட்டுத்தீயைக் கொண்டுவந்தது’ என கூறினார்.
இந்த தீ விபத்து, 51 நகரங்கள், குடியேற்றங்கள் மற்றும் யாகுட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. அத்துடன் நகரத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர்.
ரஷ்யாவின் அவசர அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாகுடியாவிற்கு தீயணைக்கு இரண்டு விமானங்களை அனுப்பியுள்ளது. தீயணைப்பு முயற்சியில் 2,200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.