எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளது.
குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது.
இதனையடுத்து, இன்று மாலை 5.30 மணிக்கு பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ அறிவித்துள்ளார்.
இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதற்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று நேற்று சபையில் உரையாற்றிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் அறிவித்தார்.
அதேபோன்று மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரித்து வாக்களிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 44 உறுப்பினர்கள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்படும் முதலாவது நம்பிக்கையில்லாத் தீர்மானம் இது என்பது குறிப்பிடத்தக்கது.