திம்புளை – பத்தனை பொலிஸ் பிரிவில் உள்ள 291 அடி நீளமான டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமற்போன யுவதி இதுவரை மீட்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது நாளாகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) கடற்படை சுழியோடிகள், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதலின்போதும் யுவதியை கண்டுப்பிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 18ஆம் திகதி தனது நான்கு நண்பிகளுடன் டெவோன் நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்றபோது குறித்த யுவதி கால் தடுமாறி நீர்வீழ்ச்சியில் விழுந்தார்.
தலவாக்கலை லிந்துலை லென்தோமஸ் தோட்டத்தில் வசித்த 19 வயதான எம்.பவித்ரா என்ற யுவதியே இவ்வாறு நீர்வீழ்ச்சியில் விழுந்து காணாமல்போயுள்ளார்.
காணாமல்போன யுவதியை தேடும் பணிகள் நேற்றும் முன்னெடுக்கப்பட்ட நிலையி,ல் அந்த பணிகள் இடைநடுவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் சுழியோடிகள் சகிதம் இன்று முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையும் பலனின்றி முடிந்துள்ளது.
இதேவேளை நாளைய தினமும் யுவதியை தேடும் பணிகள் முன்னெடுக்கப்படும் என திம்புளை – பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.