சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பான இடத்தேர்வில் தமிழக அரசின் முடிவுக்காக காத்திருப்பதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை நிர்மாணிக்க ஸ்ரீபெரும்புதூரில் தமிழக அரசு முதலில் நிலத்தை தெரிவு செய்தது.
மாநில அரசின் வேண்டுகோளின் பேரில், இந்திய விமான நிலைய ஆணையம், சர்வதேச சிவில் விமான அமைப்பிடம் இதற்கான செயல்பாட்டு சாத்தியக்கூறு அறிக்கையை சமர்பித்திருந்தது.
இது குறித்த பதில் மாநில அரசிடம் இருந்து கிடைக்கவில்லை.
ஆகவே மாநில அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.