மகாராஷ்டிராவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள 120க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்ச்சியான மழையின் காரணமாக பல பகுதிகளில் நேற்று முன்தினம் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் கடலோர மாவட்டமான ராய்காட்டில் மகாத் தெஹ்சில் மற்றும் அதனை சுற்றி நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளதுடன் 120 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவினர் இரவு பகலாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள் உட்பட ஏராளமானோர் ஹெலிகாப்டர்கள், படகுகள் ஊடாக மீட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடற்படை, இராணுவம் உள்ளிட்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.