தெற்கு சீன நகரமான ஜுஹாயில் ஐந்து நாட்கள் வெள்ளத்தில் மூழ்கிய நெடுஞ்சாலை சுரங்கப்பாதையில் சிக்கிய 14 தொழிலாளர்களில், இருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நகர அரசு அறிவித்துள்ளது.
கடந்த 15ஆம் திகதி (வியாழக்கிழமை) அதிகாலை, நீர்த்தேக்கத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் ஷிஜிங்சன் சுரங்கப்பாதையில் திடீரென தண்ணீர் கசிந்து, நுழைவாயிலிலிருந்து ஒரு கிலோமீட்டருக்கு மேல் நீர் நிரம்பியதில் பணிப்புரிந்துகொண்டிருந்த தொழிலாளர்கள் பலர் அதில் சிக்கினர்
இந்நிலையில் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த ஊழியர்களை மீட்கும் நடவடிக்கையினை மீட்பு குழுவினர் முன்னெடுத்திருந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை 2 தொழிலாளர்கள், சுரங்கப்பாதையின் நுழைவாயிலிலிருந்து சுமார் 1,060 மீட்டர் மற்றும் 1,070 மீட்டர் தொலைவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர் என ஜுஹாய் அரசு தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த திங்கள்கிழமை காலை 9 மணி நிலவரப்படி, குறித்த தொழிலாளர்கள் இருவரும் சுரங்கப்பாதையில் 732.9 மீட்டர் தொலைவிலேயே சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் சிக்கிய இடத்திலிருந்து 427.1 மீட்டர் தொலைவிலேயே கண்டெடுக்கப்பட்டனர் என சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பரந்த சுரங்கப்பாதை தண்ணீருக்கு அடியில் இருந்தபோது, அதன் ஒட்டுமொத்த நீர் மட்டம் மொத்தம் 15.5 மீட்டர் அளவினை கொண்டிருந்ததாகவும், சின்ஹுவா கூறியுள்ளது.
இந்நிலையில் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள ஏனைய தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த மீட்பு நடவடிக்கைகளுக்காக மேலும் 2,400க்கும் மேற்பட்டோர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆன்-சைட் மீட்பு தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.