பூதாகரமாக வெடித்துள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து இஸ்ரேலுக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழுத்தம் கொடுத்துள்ளார்.
இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. தயாரித்த ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ என்கிற மென்பொருள் மூலம் மொராக்கோ நாட்டின் பாதுகாப்பு படைகள், பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை உளவு பார்த்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை மொராக்கோ மறுத்துள்ளது.
அதேபோல், என்.எஸ்.ஒ. நிறுவனமும் இதுகுறித்து வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட்டை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக இஸ்ரேல் அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியில், ‘இந்த பிரச்சினை தீவிரமாக எடுத்து கொள்ளப்பட்டது என்பதை உறுதி செய்யும்படி மக்ரோன், பென்னட்டிடம் வலியுறுத்தினார். அதற்கு, இந்த குற்றச்சாட்டுகள் தான் பதவியேற்பதற்கு முன்பாக வந்தவை என கூறிய பென்னட் எனினும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டினார். அத்துடன் அவரது தொலைப்பேசியை மாற்றினார்.
பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் 14 நாடுகளைச் சேர்ந்த உலகின் முக்கியப் ஊடகவியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்களின் தொலைப்பேசிகளை அவர்கள் சார்ந்த நாட்டின் அரசாங்கமே உளவு பார்த்தது என்பதுதான் சமீபத்தில் உலக அரசியலை உலுக்கிக்கொண்டிருக்கும் செய்தி.
‘பெகாசஸ் புராஜக்ட்’ என்ற பெயரில் ‘த கார்டியன்’ உள்ளிட்ட 16 ஊடங்கங்கள் நடத்திய ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில் உலகம் முழுவதும் சுமார் 50,000க்கும் மேற்பட்டோரின் தொலைப்பேசிகள் ஹேக் செய்யப்பட்டது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெகாசஸ் ஸ்பைவேர் ஒரு தொலைப்பேசியிலிருந்து நீக்கப்படும்போது அது பயன்படுத்தப்பட்டதற்கான தடையங்களும் சேர்ந்தே அழிந்துவிடும் என்பதால், இதனால் பாதிக்கப்பட்ட தொலைப்பேசிகளைக் கண்டறிவது கடினமாக இருந்திருக்கிறது
இம்மானுவேல் மக்ரோனை தவிர, ஈராக் ஜனாதிபதி பர்ஹம் சாலி, தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சைரில் ராமோஃபோசா, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பௌலி, மொராக்கோ பிரதமர் சாத் எட்டின் எல் அத்மானி ஆகியோரின் எண்கள் வேவு பார்ப்பதற்கான பட்டியலில் இருந்துள்ளது என த வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.