மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 192 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த மாநிலத்தில் கடந்த இரண்டுவாரக் காலமாக தொடர்ச்சியாக மழைப் பெய்து வருகின்றது. இதன்காரணமாக பல உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்கிலி உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
அதேநேரம் குறித்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 192 ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அத்துடன் 2 இலட்சத்து 29 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் மிக விரைவாக நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.