அரசாங்கத்தின் தன்னிச்சையான மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை தடுக்க எதிர்காலத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்த தீர்மானங்களை எடுத்துள்ளதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாணத்தில் உள்ள உள்ளுராட்சி மன்ற தலைவர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அதன்பிரகாரம் வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் பந்துலசேனவின் நியமனத்தை திருப்பி பெற்று தமிழர் ஒருவரை அந்த இடத்திற்கு நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.
மேலும் இந்த கலந்துரையாடலின்போது தமிழ் மக்களையும் தேசத்தையும் ஆட்சி உரிமையையும் பாதுகாப்பதற்காக அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும் என்பதை அனைவரும் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதே நேரத்தில் அரசியல் தீர்வுக்காக முயற்சிக்கின்ற அதே நேரத்தில் தொடர்ந்தும் மத்திக்கு அதிகாரங்களை கையகப்படுத்துகின்ற நடவடிக்கைகளிற்கு எதிராகவும் செயற்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.