நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் 2010ஆம் ஆண்டு முதல் மேலும் 10 பெண்கள் பணியாற்றியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், குறித்த 10 பேரும் டயகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய 5 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ரிஷாட்டின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் மரணித்த ஹிஷாலினியை ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு அழைத்துச் சென்ற தரகரால் முன்னதாக பல சந்தர்ப்பங்களில் பல சிறுமிகள் பணிக்கு அமர்த்தப்பட்டமை குறித்து நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹிஷாலினியின் மரணம் குறித்து ஆராயும் பொலிஸ் குழு நேற்று முன்தினம் முதல் டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.
இதன்போது, ஹிஷாலினியின் பெற்றோர் உள்ளிட்டவர்களிடமும் குறித்த குழு வாக்குமூலம் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.