இலங்கையில் வேகமாக பரவுகின்ற டெல்டா மாறுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் மிகக் குறைந்த செயல்திறனைக் கொண்ட 13 மில்லியன் டோஸ் சினோவக் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
குறிப்பாக ஒரு சினோவக் தடுப்பூசி 15 அமெரிக்க டொலர் என விற்கப்படுகிறது, இது இலங்கை போன்ற நாட்டிற்கு மிகவும் அதிகளவிலான விலையாகும். அதேநேரம் அங்கிருந்து மற்ற தடுப்பூசிகள் குறைந்த விலையில் பெறப்பட்டுள்ளன.
அவசரகால பயன்பாட்டிற்காக சீனாவின் தயாரிப்பான சினோவக் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதியை வழங்கியிருந்தாலும் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக இந்த தடுப்பூசி மிகக் குறைந்த செயற்திறனை வழங்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிலியில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு திருப்திகரமான அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாக காட்டினாலும் அது டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கவில்லை.
அங்கு 70% க்கும் மேற்பட்ட சிலி மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள போதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு டெல்டா மாறுபாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் பயண கட்டுப்பாடுகள் மீண்டும் அமுலுக்கு வந்துள்ளன.
இதேவேளை சினோவக் தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு 6 மாதங்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகக்கூடும் என்றும் பின்னர் அவர்கள் மூன்றாவது தடுப்பூசியை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
18-59 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான முதியவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட இரத்த மாதிரிகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் சீன நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் நிபுணர் ஆலோசனைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த மூன்று மூத்த வைத்தியர்கள், சினோவக் தடுப்பூசி தொடர்பாக என்.எம்.ஆர்.ஏ. க்கு வழங்கிய ஆலோசனை மற்றும் கண்டுபிடிப்புகளை புறக்கணித்ததைக் காரணம் காட்டி ஏற்கனவே இராஜினாமா செய்துள்ளனர்.
இந்த மூன்று வைத்தியர்களும் இராஜினாமா செய்தாலும், நிபுணர் குழுவில் உள்ள எட்டு உறுப்பினர்களும் சினோவக் தடுப்பூசியை வாங்க வேண்டிய அவசியமில்லை என ஒப்புக்கொண்ட நிலையில் அரசாங்கம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது.
சுமார் 13 மில்லியன் டோஸ் சினோவக் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.