இலங்கை கிரிக்கெட் வீரர்களான தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் டிக்வெல்ல ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த மூன்று வீரர்களுக்கும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஆறு மாதங்களும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் உயிர் குமிழியை மீறியதற்காக, இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பில் இருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், தொடரின் இடைநடுவே இவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து இவர்கள் மீது விசாரணையை தொடங்கிய இலங்கை கிரிக்கெட் சபை, 5 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்திருந்தது.
இந்த சிறப்பு விசாரணைக் குழு, முன்னதாக தனுஷ்க குணதிலக மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு இரண்டு ஆண்டுகள் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஈடுபட தடை விதிக்குமாறும் நிரோஷன் டிக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட்டுகளிலிருந்தும் 18 மாத இடைநீக்கம் செய்யுமாறும் வலியுறுத்தியிருந்தது. அத்துடன் 25,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் செலுத்த வேண்டுமெனவும் கூறியிருந்தது.
ஆனால், தற்போது இந்த தண்டனை விபரம் மாற்றியமைக்கப்பட்டு. அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டு தடையும் உள்ளூர் கிரிக்கெட்டில் ஆறு மாத தடையும் 10 மில்லியன் இலங்கை ரூபாய்யும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.