இலங்கையில் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
இதற்கமைய இன்று முதல் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் சுமார் 75 வீதமானவை செயற்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
குறித்த பேருந்து சேவையை தொழிலுக்காக செல்லும் பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஈடுபடுத்துவதாகவும் இடைப்பட்ட காலப்பகுதியில், பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பாரிய அனர்த்தங்களுக்கு மத்தியில் குறித்த சேவையினை ஆரம்பிப்பதனால் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மாத்திரமே பயணிகளை அனுமதிக்க வேண்டும். மாறாக மேலதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.