தமிழ்நாடு உள்ளடங்களாக 10 மாநிலங்களில் மீண்டும் கொரோனா வேகம் எடுப்பதால், கட்டுப்பாடுகளை கடுமையாக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை ஓய்கிறது என கருதப்பட்ட நிலையில் 10 மாநிலங்களுக்குட்பட்ட 46 மாவட்டங்களில் மீண்டும் வைரஸ் தொற்று வேகம் எடுத்து பரவி வருகிறது.
இதனால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் தலைமை வகித்த சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ராஜேஷ் பூஷண், கேரளா, தமிழ்நாடு, மகராஷ்ட்ரா, ஒடிசா, அஸ்ஸாம், மீசோரம், மேகாலயா, ஆந்திரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பத்து மாநிலங்களில் 80 சதவீத பாதிப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
தொற்று பாதிப்பு அதிகமுடைய பகுதிகளில் தளர்வுகளை அமல்படுத்தியது போன்ற செயல்களால் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றுவதால் நோய் பரவுவதாகவும் கூறப்படுகிறது.
10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10 சதவீதம் இருப்பதால் அங்கு ஊரடங்குக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மாநில அரசுகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் திரளாகக் கூடுவதைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.