கொரோனாவுக்கு எதிராக இலங்கை முன்னெடுத்துள்ள போராட்டத்துக்கு ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்தும் உதவும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்தார்.
இலங்கை உட்பட உலக நாடுகளில் உயிர்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் கொவக்ஸ் திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (திங்கட்கிழமை) நாடாளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட இரு நாட்டுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
இலங்கையில் தற்பொழுது காணப்படும் தேர்தல் முறையை மாற்றுவதற்காக நாடாளுமன்றத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்கா மகிழ்ச்சியடைவதாக அந்நாட்டுத் தூதுவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
முழு உலகமும் எதிர்கொண்டுள்ள பேரழிவைத் தரும் கொரோனா தொற்றுநோய் மத்தியில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அமெரிக்கத் தூதுவர் சபாநாயகரிடம் தெரிவித்தார்.