வீட்டுத்திட்டத்தின் மிகுதி கொடுப்பனவை வழங்குமாறு கோரி சுழிபுரம் மத்தி ஜே/173 கிராம சேவகர் பிரிவு மக்கள், கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.
நேற்று (திங்கட்கிழமை), யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேச செயலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ஜே/173 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 45 குடும்பங்களுக்கு, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி ஒரு பகுதி மாத்திரமே கிடைக்கப்பெற்றது. முழுமையாக கிடைக்கவில்லை.
இதனால் மிகுதி வேலைகளை கடன்பட்டு நாங்கள்தான் செய்தோம். ஆனாலும் அதனையும் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.
இதனால் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே உரிய தரப்பினர் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தீர்வை பெற்றுத்தர வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை சங்கானை பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கையளித்துள்ளனர்.