சுகாதார விதிமுறைகள் இறுக்கமாக அமுலாக்கப்பட்டு யாழ்ப்பாண நல்லூர் கந்தசுவாமி ஆலயத் திருவிழா இடம்பெறும் என யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
நல்லூர்க் கந்தன் பெருந்திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “நல்லைக் கந்தப் பெருமானின் வருடாந்தப் பெருந் திருவிழாவானது இம்மாதம் 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இவ்வேளையில் நாடெங்கும் ஏற்பட்டுள்ள கொடிய கொரோனா தொற்றின் தீவிர பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார சட்ட நடைமுறைகள், விதிகள், அறிவுறுத்தல்கள், வழிகாட்டல்களை முழுமையாகவும் இறுக்கமாகவும் பின்பற்றி அமைதியாக ஆடம்பரமின்றி பக்திபூர்வமாக இப்பெருந்திருவிழா நடைபெற பொதுமக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இக்காலச் சூழலுக்கு ஏற்ப அவ்வப்போது விடுக்கப்படும் சுகாதார அறிவுறுத்தல்களை சிரமங்கள் பாராது, பொறுப்புணர்வுடன் கடைப்பிடித்து
வரும் நாளில் ஏற்படக்கூடிய அசௌகரியங்களை தவிர்க்க பெருமனத்துடன் உதவ வேண்டும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.