உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு பயங்கரவாத முகாம்கள் மீண்டும் இடம்பெயர்வதால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு ஏற்படும் என ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் ஒகஸ்ட் மாதத்திற்கான தலைவரும் இந்திய தூதருமான டி.எஸ் திருமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், ஆப்கானில் பயங்கரவாத சக்திகளுக்கு சர்வதேச பயங்கரவாதத்துடன் உள்ள தொடர்புகள் துண்டிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
பயங்கரவாத முகாம்கள் ஆப்கானிஸ்தானுக்கு மீண்டும் இடம்பெயரக் கூடாது என வலியுறுத்தியுள்ள அவர், இது இந்தியாவுக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறியுள்ளார்.
அங்கு நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் பலன் கிடைக்கும் என நம்புகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ள அதேவேளை, இந்த பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வு ஏற்படாது எனவும் தெரிவித்தார். அங்கு சட்டப்படியாக யார் அரசை அமைத்தாலும் அதற்கு ஆதரவு தர வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.