ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ் மாகாணத்தில் உள்ள சராஞ்ச் நகரை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிம்ரூஸின் தெற்கு மாகாணத்தின் தலைநகரான ஜரஞ்ச், நேற்று (வெள்ளிக்கிழமை) தலிபான்களிடம் வீழ்ந்ததாக பல ஆதாரங்கள் இருப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தீவிரவாதிகள் பெரும் தாக்குதலைத் தொடங்கிய பின்னர் தலிபான்களிடம் வீழ்ந்த முதல் மாகாண தலைநகராக இது மாறியுள்ளது.
வெளிநாட்டு துருப்புக்கள் வெளியேறுவதால் கிளர்ச்சியாளர்கள் நாடு முழுவதும் வேகமாக முன்னேறி வருகின்றனர். அவர்கள் கிராமப்புறங்களை கைப்பற்றி இப்போது முக்கிய நகரங்களை குறிவைத்துள்ளனர்.
அழுத்தத்தின் கீழ் உள்ள மற்ற மாகாண தலைநகரங்களில் மேற்கில் ஹெராட் மற்றும் தெற்கு நகரங்களான கந்தஹார் மற்றும் லஷ்கர் கா ஆகியவை அடங்கும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதுவர் டெபோரா லியோன்ஸ், கடந்த ஒரு மாதத்தில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில், போர் புதிய, கொடிய, மேலும் அழிவுகரமான கட்டத்தை அடைந்துள்ளது என்று கூறினார்.
நாடு பேரழிவை நோக்கி செல்கிறது என்று எச்சரித்த அவர், நகரங்களுக்கு எதிரான தாக்குதல்கள் இப்போதே நிறுத்தப்பட வேண்டும் என்ற தெளிவான அறிக்கையை வெளியிட ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுத்தார்.
பின்னர் வெள்ளிக்கிழமை, பிரித்தானிய அரசாங்கம் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து குடிமக்களும் பாதுகாப்பு நிலைமை மோசமடைவதால் வெளியேறுமாறு அறிவுறுத்தியது.
இதனிடையே ஆப்கானிஸ்தானின் அரசாங்க ஊடகப்பிரிவு மற்றும் தகவல் தொடர்பாடல் நிலையத்தின் பணிப்பாளர் தாவா கான் மேனாபால் தலிபான் அமைப்பினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அரச தரப்பு தகவல்களை தொடர்ச்சியாக ட்வீட் செய்து வந்த அவர், நேற்று காபூலில் துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரை டுவிட்டரில் 1,42,000 பேர் பின்தொடர்கின்றனர்.
பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் தாக்குதல்களை மேற்கொண்ட அடுத்த நாள் இந்த கொலை இடம்பெற்றுள்ளது.